சிறுவனும் சிரிப்புச்சாவியும்- 1

வெப்பம் அறை முழுவதும் தகித்தது. ஜன்னல் வழியாக சூடான காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளே மண் அடுப்பில் குழம்பு கொதித்தது. வெத்தலை போட்ட வாயை நன்றாக குதப்பிக்கொண்டு ஒரு வயதான பாட்டி, அடுப்பில் வைத்திருந்த குழம்புச்சட்டியை கிளறிக்கொண்டிருந்தாள். அடுப்பு

சூட்டின் வெக்கையினால் அறையை விட்டு வெளியே வந்து தன் வாயில் போட்டு குதப்பிக்கொண்டிருந்த வெத்தலை சாறை வாழைமரத்தின் அடியில் துப்பிக்கொண்டே, தங்கம்! எங்கடா இருக்கே என்றாள்.

பாட்டி, நான் விளையாடிட்டு இருக்கேன் என சிறுவன் வெளியில் இருந்து கத்தினான்.

சீக்கிரம் வாடா ராசா, நேரம் ஆய்டுச்சு!.

நான் தான் பந்து வீசுவேன் என்று மற்ற சிறுவர்களிடம் சண்டை போட்டு அப்போது தான் பந்தை வாங்கியிருந்தான். பாட்டி சொல்வதை தட்ட முடியாமல் தயக்கப்பட்டுக்கொண்டே பந்தை கொடுத்துவிட்டு பாட்டியிடம் வந்தான்.

ADVERTISEMENT

பாட்டிக்கு கால் வலிக்குது தங்கம். நீ, போய் இந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு வந்துடு. நேற்று கூட உனக்கு அந்த வீட்டை காமிச்சேன் தானே, இந்த தெருவுலையே கடைசி மாடி வீடு. சீக்கிரம் போ சாமி. சோறு ஆறிவிடும்.

சரி, கொடு பாட்டி. நான் போயிட்டு வரேன்.

இரு. நான் பாத்திரத்தில் போட்டுக் கொடுக்கிறேன் என பாட்டி சொல்ல.

“ஏன் பாட்டி? அவங்க வீட்டில் சமைக்க மாட்டாங்களா. நாம் ஏன் சமைச்சு தரனும்”.

“நீ, இப்போ தானே பாட்டியை பார்க்க வர, அதனால் தான் உனக்கு தெரியல”. அந்த வீட்டில் என்னை விட, ஒரு வயசான தாத்தா மட்டும் தான் இருக்கார். அவருக்கு நான் தான் தினமும் சமைச்சுக் கொடுக்கிறேன். அந்த வீட்டின் கேட்டை திறந்து உள்ளே போய் வீட்டின் தாழ்வாரத்தில் சாப்பாட்டுக் கூடையை வைத்தால் போதும். அந்த தாத்தாவும் வெளியில் தான் உட்கார்ந்து இருப்பார்.

ADVERTISEMENT

என்னை யார்? என்று கேட்டால் என்ன சொல்வது என்று பாட்டியிடம் சிறுவன் கேட்க,

அதற்கு பாட்டி, “இட்லிக்காரப் பாட்டி சாப்பாடு கொடுத்துவிட்டாங்க என்று சொல் போதும்”. சரி, சரி சீக்கிரம் போய் கொடுத்துட்டு வா. சாப்பாடு ஆறிவிடும் என சாப்பாட்டு கூடையை கொடுத்தாள் பாட்டி. மறக்காமல் நேத்து இரவு கொடுத்துவிட்டு வந்த சாப்பாட்டுக் கூடையும் வெளியில் தான் இருக்கும். அதை எடுத்துட்டு வந்துடு ராசா.

“சரியென்று கூடையை வாங்கியவன் நடக்க ஆரம்பித்தான்”.

திடிரென்று பாட்டிக்கு ஞாபகம் வந்தது. பேரனை நிறுத்தி கையில் “ஒரு பொருளை” கொடுத்தாள்.

என்ன என்று பார்த்தான். “சாவி” ஒன்று இருந்தது.

ADVERTISEMENT

இது, அந்த வீட்டு கேட்டின் சாவி. வெளியில் பூட்டி தான் இருக்கும். நீ போகும்போது திறந்துவிட்டு செல். பின்பு வரும்போது மறக்காமல் பூட்டிக்கொண்டு வா என்றாள்.

ஏன் பாட்டி? என சிறுவன் கேட்க.

அதை நான் பிறகு சொல்கிறேன். “நீ இப்போது போ” என்றாள்.

*****

சிறுவனும் அந்த வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் சிலர் இவனை யார் வீட்டிற்கு வந்தே என கேட்க? நான், இட்லிகாரப் பாட்டியின் பேரன் என சொன்னான். ஓ! பட்டிணத்தில் இருந்து வந்தவனா? பாரேன். இட்லிகாரப்பாட்டிக்கு எவ்வளவு பெரிய பேரன் என்று பேசிக்கொண்டனர். நான் சின்னப்பையன் தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த வீட்டை அடையும்போது சில பெண்களையும், அவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு வரும் சிறுவர்களையும் பார்த்தான்.

ADVERTISEMENT

அந்த பெண்கள், இந்த கிழவனுக்கு இருந்தாலும் ரொம்ப திமிர். பசங்க, ஏதோ தெரியாமல் உள்ளே போய்விட்டால் போதும், சும்மா குதிப்பானே. உள்ளேயே கிடக்கும் அந்த கிழவனுக்கு ஒரு சாவு வரமாட்டிங்குது என்றாள் ஒருத்தி. அந்த கிழம், பேசும் பேச்சுக்கு அவ்வளவு சீக்கிரம் சாவு வருமா என்றாள் இன்னொருத்தி.

“ஏன்டா! அறிவுகெட்டவனே உன்னைத்தான் அங்கு போகக்கூடாது என்று சொன்னேன் தானே. அப்புறம் எதுக்கு அங்கே ஏறிட்டு போனே” என்றாள் அவள் மகனைப்பார்த்து கோபமாக.

பந்து உள்ளே போய்டுச்சு மா என்று அந்த பெண்ணுடைய மகன் அழுதுகொண்டே சொன்னான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அவர்களை கடந்து அந்த வீட்டின் கேட்டிற்கு வந்தான் சிறுவன்.

உள்ளே பார்த்தான். வீட்டின் கதவருகே வெளியில் இருந்து வந்தவர்கள் அமருவதற்கு இடம் இருந்தது. ஆனால், அங்கு எந்த நாற்காலியும் இல்லை. அவனின் நகரத்து வீட்டில் இதேபோன்ற இடத்தில் நாற்காலிகள் போடப்பட்டு இருப்பதை நினைத்தான். இங்கே, ஒரே ஒரு சாய்வு நாற்காலி மட்டும் இருந்தது. அதில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். பாட்டி கொடுத்த சாவியை எடுத்து கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே யார் வருவது என்று அந்த பெரியவர் பார்த்தார். உள்ளே வருவது சிறுவன் என்றதுமே அவர் கிராமப்புற கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். சிறுவனுக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை. நகரத்தில் வளர்ந்த அவன், தற்போது தான் பாட்டியை பார்க்க பள்ளி விடுமுறையில் வந்திருந்தான்.

ADVERTISEMENT

“கட்டித்தின்னி” யாருடா நீ எப்படி உள்ளே வந்தே என்றார் பெரியவர்.

“இட்லி… இட்லிக்காரப்பாட்டி பேரன் நான். சாப்பாடு கொடுத்துவிட்டாங்க” என சிறுவன் தயங்கிக்கொண்டே சொன்னான்.

“அவளுக்கு  ஒரு பேரன் வேறுதான் கேடு”. வச்சுட்டு போ.

சாப்பாட்டு கூடையை அங்கே ஓரமாய் வைத்துவிட்டு பழைய கூடையை பார்த்தான். பாத்திரங்கள் கழுவாமல், சாப்பாடும் அனைத்து இடங்களில் சிந்தியும், பாத்திரங்களில் ஒட்டியிருந்த சோறு வறண்டுபோய் நாற்றம் அடித்தது. மூக்கை பொத்திக்கொண்டு பழையதை எடுத்துக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.

ஏய் நில்! உன் பேர் என்ன?

ADVERTISEMENT

அவன் தயங்கிக்கொண்டே சித்தார்த்… என சொல்ல, அவருக்கு புரியவில்லை. என்ன என்று மீண்டும் கேட்டார். சித்தார்த் என சொல்ல வந்து சித்து, சித்து என கத்தி சொன்னான். ஆமா… உங்க பேர் என்ன என்று திருப்பிக்கேட்டான். அவன் கேட்டது இவருக்கு ஆச்சரியத்தை தந்தது. மற்ற பொடியன்கள் நம்மை பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்வார்கள். இவன் என்னையே கேள்வி கேட்கிறான்.

“என்னுடைய பேர் முத்துசாமி”. என்னடா வயசு உனக்கு? என்னையே கேள்வி கேட்குறே.

“எனக்கு 12 வயசு. ஏழாவது படிக்கிறேன்”. உங்களுக்கு என்ன வயசு? என்றான் சிறுவன்.

எனக்கா, என் வயசு, என் வயசு என்று இழுத்தார் பெரியவர். அவர் பிறந்தநாள் கூட அவருக்கு தற்போது ஞாபகம் இல்லை. “தன் மனைவி இறந்தபொழுது தனக்கு 68 வயது என்று ஞாபகம்”. அவள் இறந்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஓடிவிட்டது என்று நினைத்துக்கொண்டார். என் வயது உனக்கு எதுக்கு? ஆமா, இங்கே எதுக்கு வந்தே என்றார்.

ஸ்கூலுக்கு லீவு விட்டுடாங்க. அப்பா தான் லீவு முடியும் வரைக்கும் இங்கே இருக்கச்சொல்லி கொண்டுவந்து விட்டாங்க.

ADVERTISEMENT

உங்கொப்பனுக்கு, இப்போது தான் உன் பாட்டி இங்கே இருக்கிறது ஞாபகம் வந்துதா?. உன்னை அங்கே சமாளிக்க முடியலைன்னா இங்க கொண்டுவந்து விட்டுவிடுவானா? என கேட்டார் பெரியவர்.

இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றான்.

கிளம்பு….. கிளம்பு…. நிற்காதே என்று பெரியவர் அதட்ட சிறுவன் கேட்டை பூட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

*****

Leave a Reply