ஏன் பாட்டி அந்த வீட்டுச்சாவி நம்மகிட்ட இருக்கு. நாம் ஏன் அந்த கேட்டை பூட்டிவைக்கனும். அந்த தாத்தா எங்காவது போய்விடுவாரா என்றான்.
அதற்கு பாட்டி சிரித்துக்கொண்டே, அப்படி இல்லை பேராண்டி. அந்த தாத்தாவுக்கு பிள்ளைங்களும், உன்னை மாறி நிறைய பேரன்களும், பேத்திகளும் இருக்காங்க.
அப்புறம், ஏன் யாரும் இவரை பார்க்க வரவில்லை.
எல்லாரும் வெளியூர், வெளிநாடு என்று போய் விட்டார்கள். இந்த தாத்தாவுக்கு ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்களும், கொஞ்ச காலத்துக்கு முன் இறந்துட்டாங்க. அப்போது தான் இவரோட பிள்ளைங்க எல்லாரும் வந்திருந்தாங்க. அந்த அம்மாவை அடக்கம் பண்ணிய கையுடன் சொத்தை பிரித்து வாங்கிக்கொண்டு ஆளுக்கொரு திசையில் போய்விட்டாங்க. அதற்கப்புறம் யாருமே இவரை பார்க்க வரவில்லை. உன்னைக்கூட நான் பிறந்தபோது பார்த்தது. அதன்பின் உன்னை பார்க்க எனக்கு இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு வயதாகி விட்டால் ஒரு சுமையாய் நினைத்துவிடுகிறார்கள். அப்புறம் இவரும் அந்த கேட்டைத்தாண்டி வருவதில்லை. இத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. ஒருவேளை இவரை பார்க்க அவரது பிள்ளைகள் வந்தால் வெளியில் நிற்கட்டும் என்று கேட்டை பூட்டிவிட்டார். அந்த கேட்டை கடந்த பத்து வருடத்தில் ஒருமுறை கூட அவரும் திறக்கவில்லை. சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். ஒருவேளை அவர் இறந்தால் அதற்கு அவர் பிள்ளைகள் வருவார்கள் என்ற எண்ணம் அவருக்கு.
ஏன் பாட்டி அப்படி?.
அப்போது தானே, அந்த மிச்சம் இருக்கும் வீட்டையும் வித்து பணத்தை பறித்துக்கொண்டு ஓட சரியாய் இருக்கும். ஆசையாசையாய் வளர்த்த பிள்ளைகளுக்கு எங்கள் பாசம் எங்கே தெரியப்போகிறது என்று கண்ணீர் விட்டாள் பாட்டி.
“கவலைப்படாதே பாட்டி. அதுதான் நான் வந்துவிட்டேனே. இனி, எப்போதும் வந்துகொண்டே இருப்பேன் சரியா என்றான்”.
“என் தங்கமே! அது போதும் எனக்கு என்றாள்”.
*****
முத்துசாமி சாய்வு நாற்கலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரின் தினசரி வேலையும் அதுதான். காலையில் தூங்கி எழுந்தபின் நேராக வந்து நாற்காலியில் அமர்ந்துவிடுவார். சாப்பாடு வந்தால் சாப்பிட்டுவிட்டு மீண்டும் இதே வேலை தான். தன் வீட்டில் இருக்கும் மாமரத்தில் இருந்து மாம்பழங்களை திருட சிறுவர்கள் வந்தால் மட்டும் அந்த நாற்காலியை விட்டு எழுந்துவந்து அவர்களை திட்டுவார் அல்லது யாரேனும் மாட்டினால் தன் கைத்தடியால் இரண்டு அடிகள் கொடுப்பார்.
அவருக்கு ஒரேயொரு கவலை மட்டும் தான். அது தன் இறப்பை பற்றி மட்டும் தான். தான் இறந்தால் என் பிள்ளைகள், பேரன், பேத்திகள் அப்புறம் என் சொந்தங்கள் வருவார்களா. நான் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுவார்களா? என் பிள்ளைகள் என் பேரன், பேத்திகளிடம் இதுதான் உங்கள் தாத்தா என்று சொல்வார்களா? என் பிணத்தை மாலை, மரியாதையோடு எடுத்துச்செல்வார்களா?
வேலை நாளில் இறந்துவிட்டால் வருமானம் போய்விட்டதே என்று தூற்றுவார்களா? இல்லை, ஒரு ஞாயிற்று கிழமையில் நான் இறந்தால் அனைவரும் வருவார்களா?. என்னை அடக்கம் செய்தபின் வீட்டில் யாருக்கு எவ்வளவு பங்கு என்று சண்டை போடுவார்களா அல்லது என் பிணத்தை தூக்குவதற்கு முன்பே சொத்தை பங்கு பிரிக்க சண்டை போடுவார்களா?. என்னை எரிக்கலாமா அல்லது புதைக்கலாமா என்று என் சொந்தங்கள் விவாதம் செய்வார்களா? என் பேரக்குழந்தைகளை என் சாவுக்கு கூட்டிவருவார்களா?.
என் ஊர்க்காரர்கள் கூட நான் இறந்து கிடந்தால் பரிதாபத்துடன் பார்ப்பார்களா இல்லை குளித்துவிட்டு இப்போது தான் புதுத்துணி போட்டேன். ஒருவேளை அந்த கிழவன் காலையில் சீக்கிரமே இறந்திருந்தால் பழைய துணியுடனே போய்விட்டு வந்திருக்கலாம். இப்போது பார் மீண்டும் குளிக்கவேண்டும் என்று என் பிணத்தின் மீது சாபம் விடுவார்காளா? மாம்பழம் திருடவரும் சிறுவர்கள் கூட நான் இறந்தபின் நான் இல்லாததை கண்டு வருத்தமடைவார்களா என்று நினைத்துப்பார்த்தார். இந்த தவிப்பு, இந்த ஒருநாள் மட்டும் இல்லை அவருக்கு. அவர் என்று இந்த கேட்டைப் பூட்டினாரோ அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் இதே தவிப்பு தான்.
*****
சித்து, ஒவ்வொரு நாளும், மூன்று வேளையும் அவனே சாப்பட்டுக்கூடையை கொண்டு சென்றான். பாட்டி செல்வதாய் கூறினாலும் வேண்டாம் என்று அவனே கொண்டு சென்றான். முதலில் அவன் செல்லும்போது அவனை திட்டிக்கொண்டே இருந்த பெரியவர், சில நாட்கள் செல்ல, அவனை திட்டுவதை நிறுத்திவிட்டார். இவனும் பயந்து, பயந்து செல்வதை விட்டுவிட்டான். ஆனாலும், முத்துசாமி அவனிடம் அதிகமாய் பேசுவது இல்லை. இவனும், ஏதாவது துடுக்குத்தனமாக கேட்டால் பதில் சொல்லமாட்டார். அவனையும் பார்க்க மறுத்து திரும்பிக்கொள்வார். இந்த சிறுவனைப் பார்க்கும் போது, அவரின் பேரக்குழந்தைகள் தான் அவரின் நினைவுக்கு வந்தது. இட்லிகாரப்பாட்டி, ஏதோ புண்ணியம் செய்திருப்பாள் போல். அதுதான் அவள் குடும்பத்துடன் சேர்ந்துவிட்டாள். என்னைப்பார், நான் என்ன பாவம் செய்தேன். ஒருவர் கூட என்னை பார்க்க வரவில்லை.
கேட்டை திறந்து சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே வந்தான் சிறுவன். ஆனால், பெரியவர் நாற்காலியில் திரும்பிப்படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். சிறுவனும் கூடையை வைத்துவிட்டு சாப்பாடு வைத்துவிட்டேன் என்று சொல்ல, அவர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் சிறுவன் சொல்ல, அவர் அசையாமல் படுத்திருந்தார். சித்துவும் அவர் அருகில் சென்று அவரின் தோளைத்தொட்டு தாத்தா, தாத்தா என்று எழுப்பினான்.
அந்த வார்த்தையை கேட்டதும், தன் பேரக்குழந்தைகள் தான் தன்னை கூப்பிடுகிறார்கள் என்று வெடுக்கென்று திரும்பிப்பார்த்தார். அங்கே, சித்து மட்டும் தான் நின்றிருந்தான். மீண்டும் அவன் தாத்தா என்று சொல்ல, அவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இந்த வீட்டுச்சுவர் ஏறிவந்து பழம் திருடும் சிறுவர்கள் கூட ஏய் கிழம், பொக்கைவாய், மூணுகால் ஆமை இப்படி தான் சொல்வார்களே தவிர, ஒருவர் கூட தாத்தா என்று அழைத்ததில்லை. சித்து, தாத்தா என்று அழைத்ததுமே அவருக்கு கோபம் எல்லாம் போய்விட்டது. அவனை கட்டிக்கொண்டார்.
இந்த வயதான பெரியவர்களும், இந்த குழந்தைகளும் ஒன்று தான் போல். பாசத்துக்காக எவ்வளவு ஏங்குகிறோம் என நினைத்தார் முத்துசாமி. சித்துவுக்கும், அவர் கட்டிகொண்டதில் சந்தோசம். நான் அப்பா, அம்மாவுடன் இருக்கும்போது பக்கத்து வீட்டு தாத்தாவிடம் பேசினாலோ அல்லது அவர் வீட்டிற்கு சென்றாளோ அடி விழும். அங்கே, ஏன் போறே, அந்த ஆள் ஏதாவது கொடுத்தாரா அல்லது அவர் கொடுத்ததை நீ வாங்கி சாப்பிட்டாயா. யாரும் இல்லாதபோது உன்னை அவன் கடத்திக்கொண்டு போய், எங்காவது வித்துடுவான் என்று அம்மா பயமுறுத்திக்கொண்டே இருப்பதை நினைத்துப்பார்த்தான்.
அன்றிலிருந்து, காலை முதல் மாலை வரை முத்துசாமியின் வீட்டிலேயே இருந்தான். பாட்டி சாப்பாட்டுக் கூடையை கொடுத்தவுடனே எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான். அங்கே இருவரும் தங்கள் கதைகளை கூறிக்கொள்வார்கள். தன் அம்மாவிடம் எப்படி பொய் சொல்லி அடிவாங்கினேன் என்றும், பள்ளியில் நண்பர்களுடன் விளையாடி ஆசிரியரிடம் மாட்டி அடிவாங்கினேன் என்று தன் கதைகளை சொல்வான் சித்து.
தாத்தாவும், தன் மனைவி மற்றும் பிள்ளைகளை பற்றி சொல்வார். அவனும், அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு திருப்பி கேள்விகள் கேட்பான். அவன் கேள்விகள் கேட்பது அவருக்கு பிடித்திருந்தது. அவரின் மனைவியை நினைத்துப்பார்ப்பார். அவள் தான், நான் எது சொன்னாலும் திருப்பி கேள்வி கேட்பாள்.
சித்துவுக்கு அங்கு நேரம் போவதே தெரியாது. முத்துசாமிக்கும், அவனிடம் பேசுவது பிடித்திருந்தது. ஏனென்றால், பத்துவருடம் யாரிடமும் பேசாமல் இருந்தார் அல்லவா. இப்பொழுது அனைத்தையும் பேசவேண்டும் என்றிருந்தது அவருக்கு. பேசப்பேச அவரின் மனம் இலகுவாக மாறியிருந்தது. ஆனால் அந்த சாப்பிட்ட பாத்திரங்கள் எப்பொழுதும் போல் நாற்றம் அடித்துக்கொண்டே இருந்தது.
*****