நாம் சிறுவயதில், இரவில் மின்னும் மின்மினி பூச்சிகளை பார்த்திருப்போம். கிராமங்களில், இருளில் மின்னுவதை பார்த்து சிலாகித்திருப்போம். அதுவும் தூரத்தில் நின்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நகரத்தில் அதற்கும் வாய்ப்பு இருக்காது. இப்போது கிராமங்களில் கூட மின்மினி பூச்சிகளை பார்ப்பது அரிதாக மாறிக்கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட மின்மினி பூச்சிகள் உங்கள் அருகில் பறந்தால், அதுவும் ஆயிரக்கணக்கில் பறந்தால் உங்கள் அனுபவம் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஓரிடம் இருக்கிறது.
கடந்த வருடம் ஜீரோ டிகிரீ பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுகதை பயிலரங்கம் சாத் தர்ஷன் ஆசிரமத்தில் நடந்தது. இந்த இடம் கோயம்புத்தூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், ஆனைக்கட்டி பகுதியைத்தாண்டி கேரளா பகுதிக்குள் சிறுவாணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆசிரமம் என்றவுடன் ஏதோ மதம் சார்ந்து இயங்கும் இடம் என்று நினைக்க வேண்டாம். அனைத்து மதத்தினரும் வரலாம் என்றே சொன்னார்கள் அந்த ஆசிரமத்தை நடத்தும் தம்பதி.
வேலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது. மன அமைதியே இல்லை. எங்காவது போய்விட்டு வரவேண்டும் என்று நினைப்பவர்களும், பைக்கை எடுத்துக்கொண்டு லடாக் போனால்தான் மனதிற்கு சந்தோசம் கிடைக்கும் என்று நினைப்பவர்களும் கண்டிப்பாக இந்த இடத்திற்கு போகலாம். அங்கே போனால் போனை மறந்துவிட வேண்டியது தான். ஏனென்றால் சிக்னல் கிடைக்காது.
அங்கேயே தியான மண்டபம் உள்ளது. காலை 6 மணிக்கு மணி அடிக்கும். விருப்பமுள்ளவர்கள் தியானத்தில் கலந்துகொள்ளலாம். டீ டைம், சாப்பாட்டு நேரம் என்று அனைத்துக்கும் மணி அடிக்கப்பட்டுவிடும். தியானத்தை முடித்துவிட்டு வாக்கிங் போகலாம். அல்லது பக்கத்தில் ஒரு மலைக்குன்று இருக்கிறது. ட்ரெக்கிங் போகலாம். குழுவாக செல்வது நல்லது. மழை ஈரத்தில் ரெக்சின் செருப்பை போட்டுக்கொண்டு ட்ரெக்கிங் சென்று நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. கூடவந்த பையனுக்கு கால் சுளுக்கிவிட்டதால் அவனையும் தாங்கி பிடித்துக்கொண்டு இறங்கிவந்தது இன்னொரு அனுபவம்.
காலையில், சேவா என்ற நம்மால் முடிந்த தன்னார்வ வேலையை செய்யலாம். கட்டுமான வேலை இருந்தால் செங்கல், மணல் என்று எடுத்துதருவது போன்ற வேலைகளை சிறிது நேரம் செய்யலாம். பின்பு, டீ ஸ்நாக்சை முடித்துவிட்டு, விருப்பமுள்ளவர்கள் ஆற்றில் குளிக்கலாம். இங்கே வெயில் எப்படி கொளுத்துகிறது. ஆனால், சிறுவாணி ஆறு ஐஸ்கட்டி உருகி வருவதுபோல் குளிராகத்தான் இருக்கும். சோப்புக்கும், ஷாம்பூக்கும் அனுமதி இல்லை.
மூன்று வேளையும் உணவு மற்றும் டீ ஸ்நாக்ஸ் கொடுத்துவிடுவார்கள். தோசை, பூரி, பரோட்டா போன்ற உணவுகள் கிடைக்காது. அதிகம் எண்ணெய் சார்ந்த உணவுகள் கிடைக்காது. மாலை நேரத்தில்தான் அங்கே அதிசயம் நிகழும் நேரம். ஆறுமணிக்கு மேல் அனைத்து ரூம்களிலும் லைட்களை ஆப் செய்துவிட சொல்வார்கள். செல்போனை கணடிப்பாக சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும். அந்த முழுஇடமே இருளாக இருக்கும். ஒரு வட்ட வடிவிலான இருக்கைகள் உள்ள இடத்திற்கு சென்று அனைவரும் அமர்ந்துவிட வேண்டும். எந்த சத்தமும் போடக்கூடாது. அப்போது எங்களைச்சுற்றி அவ்வப்போது வெளிச்சம் வந்துவந்து மறைந்தது. சில நொடிகளில் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் எங்களை சுற்றி பறக்க ஆரம்பித்தன. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஏதோ இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டில் நீங்கள் தனியாய் இருக்கும்போது, உங்களைச் சுற்றி வெளிச்சம் படர்ந்தால் எப்படியிருக்கும். சிறுவயதில் தூரத்தில் பார்த்த மின்மினி பூச்சிகள், எங்கள் முகத்துக்கு அருகில் பறந்து கொண்டிருந்ததன. ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த நிகழ்வு நடக்கும். அதுவும் தினமும். நாங்கள் இரு நாட்கள் தங்கியிருந்தோம். இரண்டாவது நாள் ஒரு ஜோடி வந்திருந்தார்கள். மின்மினி பூச்சிகளை பார்க்கும் நேரத்தில், அந்த ஜோடியில் ஆண் கிட்டார் வாசிக்க, பெண் ஜிப்ரிஸ் மொழியில் பாடினார். என்ன பாடினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது.
அந்த பகுதியை சுற்றி இருளர் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பாடுக்காவும் அந்த ஆசிரமம் சில முயற்சிகளையும் எடுத்துவருகிறது. அந்த இடத்தின் அருகில் மாலை நேரத்தில் வாக்கிங் செல்வோம். அம்மன் கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. தமிழ்பாட்டு பலமாக ஒலித்தது. அங்கே மலையாளிகளை விட தமிழ் ஆட்கள் தான் அதிகமிருந்தார்கள்.
கடந்த வருடம் ஏப்ரல் மாத வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் இருந்த எனக்கு, அங்கே இருந்த இரண்டு நாட்களும் நிம்மதியாக தூங்கினேன். ஒருசில அறைகளில் மட்டும் கையளவு சிலந்திகள் ஒன்றிரண்டு வரும். ஆனால் அது விஷமில்லை என்று சொன்னார்கள். கம்போடியா நாட்டில் இருந்து வந்த வயதான ஆள் மாதக்கணக்கில் தங்கியிருந்தார். அதேபோல் ஒரு வெளிநாட்டு பெண்மணியும் தங்கியிருந்தார். யாரும் அடுத்தவரை தொந்தரவு செய்யவில்லை.
வார நாட்களில் தங்க ஐநூறு ரூபாய். உணவு மற்றும் டீ ஸ்நாக்ஸ் உட்பட. வார இறுதிநாட்களில் 200 ரூபாய் அதிகம். ஆனால், வார இறுதிநாட்களில் அவ்வளவு எளிதில் இடம் கிடைக்காது. சைவ உணவுகள் தான். குடிக்க, புகைக்க அங்கே அனுமதி இல்லை. சிறுவயது குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. நகர வாழ்க்கைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு அமைதிக்கான இடம் தேடினால் அதற்கு சரியான இடம் இதுதான்.
https://www.instagram.com/anandsatdarshan/
https://satdarshan.org/
https://www.google.com/maps/dir//4MVP%2BFQQ,+Kottathara,+Kerala+678581/@11.1436895,76.6045887,12z/data=!4m8!4m7!1m0!1m5!1m1!1s0x3ba88f58b6789a6d:0xb1ed2ceeb831f324!2m2!1d76.6869906!2d11.1437007?entry=ttu